கிழக்கு கொள்கலன் முனையத்தின் 2ஆம் கட்டப்பணிகளில் முறைகேடு! சஜித் குற்றச்சாட்டு
கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பல குறைபாடுகளும் முறைகேடுகளும் நிகழ்ந்துள்ளதாக அங்கு பணியாற்றும் பொறியியலாளர்களும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் சுட்டிக்காட்டுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் நிர்மாணப் பணிகள் தொடர்பில் அதன் பொறியியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
3 முறை காலநீடிப்பு
"2022 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டு 2025 ஜனவரி 3ஆம் திகதிக்குள் நிறைவடையவிருந்த இந்த திட்டத்தை இதுவரை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 3 முறை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனினும், இந்த எந்தவொரு காலநீடிப்புக்கும் அமைச்சரவை அனுமதிகூடப் பெறப்படவில்லை. திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக் குழுவும் தனித்தனியாக செயற்பட வேண்டும் என்ற விதி மீறப்பட்டு, பொறியியலாளர்கள் இரு பிரிவுகளுக்கும் சேவையாற்றும் நபர்களாக மாற்றப்பட்டுள்ளதால் நடுநிலைப் பேணலில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
வேலைத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை குறித்துப் பாரதூரமான சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறித்து துறைமுக அமைச்சர் கவனத்தில்கொள்ள வேண்டும்.
சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுதல், அறவிடப்பட வேண்டிய கட்டணங்களை நீக்குதல், தொடர்ச்சியான நட்டத்தை ஏற்படுத்துதல் போன்ற செயல்கள் சந்தேகத்துக்குரியவை.
3 ஆவது கட்ட காலநீடிப்பு
தற்சமயம் 3ஆவது கட்டக் காலநீடிப்பு 2026 ஜூலை 7ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், 4ஆவது கட்டம் துறைமுக அதிகார சபையின் அனுமதியின்றி நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொடுப்பனவுகளும் சட்டவிரோதமானவையாகக் காணப்படுகின்றன.
இந்தத் திட்டத்துக்குத் தேவையான மனிதவளம் போட்டித் தன்மையான முறையின் கீழ் 2019ஆம் ஆண்டின் முகாமைத்துவ சேவைகள் சுற்றுநிரூபத்தைப் பயன்படுத்தி ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட போதிலும், இவர்களின் சம்பளத்தில் எந்தவொரு புதுப்பித்தலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 19 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam