யாழில் அதிகரிக்கும் இரும்பு திருட்டு: சட்ட நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
யாழ் காங்கேசன்துறை துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இரும்பு திருடிய இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் நேற்றுமுன்தினம்(29.07.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும், சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ இரும்பை மீட்டுள்ளதாகவும், கைதானவர்களில் ஒருவர் சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நல்லிணக்க புரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய நபர் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மாங்கொல்லை எனும் பிரதேசம் கடந்த 33 ஆண்டுகளாக இராணுவ கட்டுப்பாட்டினுள் இருந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் அப்பகுதியில் இருந்து வெளியேறி இருந்தனர்.
அசமந்த நிலையில் பொலிஸார்
குறித்த பகுதி இன்னமும் காணி உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாத நிலையில், அப்பகுதிகளுக்குள் ஊடுருவும் இரும்பு திருடும் நபர்கள், வீடுகளை உடைத்தும், காணிகளுக்குள் காணப்படும் இரும்புகளை திருடி செல்கின்றனர்.
திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தொடர்ந்தும் இரும்புகள் களவாடப்பட்டு வருவதுடன், அப்பகுதிக்கு அண்மித்த பகுதிகளில் மீள் குடியேறியுள்ள மக்கள் , திருடர்களின் நடமாட்டத்தால் அச்சம் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே பொலிஸார் அப்பகுதிகளில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |