உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீடித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் “டித்வா” புயல் மற்றும் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட பெரும் பாதிப்புகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் இறுதி நாள் 2025 நவம்பர் 30ம் திகதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வரி அறிக்கைகளை தாக்கல் செய்யாதவர்கள்
எனினும், சீரற்ற காலநிலை சூழ்நிலைகளால் பல வரி செலுத்துநர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் அந்தக் காலக்கெடுவிற்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2025 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வோர் தாமதத்திற்கான அபராதங்கள், விசாரணைகள் அல்லது குற்றவியல் நடவடிக்கைகள் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்னமும் வரி அறிக்கைகளை தாக்கல் செய்யாதவர்கள் இந்த சலுகைக் கால வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |