மத்திய கிழக்கில் உச்சம் தொடும் போர்ப் பதற்றம் : ஈரானின் உயிர்நாடியை தாக்கி அழிக்கவுள்ள அமெரிக்கா
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் மிக முக்கியமான எரிபொருள் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் (Kharg Island) உள்ள அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் வெளியிட்ட செய்தியில் அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் (CENTCOM) நடத்திய தாக்குதலானது, மத்திய கிழக்கு வரலாற்றிலேயே நடத்தப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த குண்டுவீச்சுகளில் ஒன்று என அவர் வர்ணித்துள்ளார்.
தற்காத்துக்கொள்ளும் திறன் ஈரானிடம் இல்லை
எனினும், "ஈரானின் எண்ணெய் உட்கட்டமைப்புகளை அழிக்கும் திறன் அமெரிக்காவிற்கு இருந்தபோதிலும், நாகரிகமான காரணங்களுக்காக அவற்றை அழிக்காமல் தற்போது தவிர்த்துள்ளேன்" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு ஈரானோ அல்லது வேறு எவரோ இடையூறு விளைவித்தால், இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்து எண்ணெய் கிணறுகளை அழிக்கத் தயங்கமாட்டேன் என அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிடம் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் திறன் இல்லை என்றும், அமெரிக்கா நினைத்தால் எதனையும் அழிக்க முடியும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஈரான் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, அவர்களின் நாட்டில் எஞ்சியிருப்பதைக் காப்பாற்றுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் 90 சதவீத மசகு எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் இந்தத் தீவு, ஈரானின் "எண்ணெய் உயிர்நாடி" எனக் கருதப்படுகிறது.