ஈரானிய கப்பல்கள் தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு பறந்த செய்தி!
சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் நடமாடி வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகத்தின் இந்த அறிவிப்பையடுத்து, இது குறித்து பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சுக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கப்பல்கள் பயணிக்கக்கூடிய பாதைகள் குறித்து இலங்கை கடற்படை தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
அந்தக் கப்பல்கள் எவையும் இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்குள் நுழையவில்லை என அமைச்சர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில், இலங்கையின் பிராந்திய கடற்பரப்பில் இருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் ஈரானியக் கொடி ஏந்திய கப்பல்களும், பிற வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் அடங்கும். எனினும், அவை எவையும் இலங்கையின் உள்நாட்டு கடற்பரப்பிற்குள் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இக்கப்பல்கள் இலங்கை அரசாங்கத்திடம் எந்தவித வசதிகளையோ அல்லது உதவிகளையோ கோரவில்லை; அரசாங்கமும் அத்தகைய வசதிகள் எதையும் வழங்கவில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தங்கியிருப்பது சாதாரணமான ஒரு விடயமாகும்.
குறித்த கப்பல்கள் குறித்துத் தொடர்ந்து அவதானம் செலுத்துவதைத் தவிர, அவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வேறு எந்தவித தலையீடுகளையோ அல்லது நடவடிக்கைகளையோ மேற்கொள்ளவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் தெளிவுபடுத்தினார்.
கடந்த மார்ச் மாதம் இலங்கையின் தென் கடற் பரப்பில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்க கடற்படை மேற்கொண்ட தாக்குதல்களில் பல ஈரானிய படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.