ஈரான் - அமெரிக்கா போர்: பாகிஸ்தானின் இருகட்ட அமைதித் திட்டம் முட்டுக்கட்டையாகும் ஹோர்முஸ் விவகாரம்
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், சர்வதேச எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்கவும் பாகிஸ்தான் இருகட்ட அமைதித் திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் பாகிஸ்தான் பகிர்ந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் உறுதிப்படுத்தியுள்ளார்.
ட்ரம்பின் எச்சரிக்கை - முக்கிய கடல் வழித்தடங்களை குறிவைத்துள்ள ஈரான்! ஈரானின் மூத்த ஆலோசகரின்அறிவிப்பு
உடனடி போர்நிறுத்தம்
இதற்கிடையில், பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிம் முனீர், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
'இஸ்லாமாபாத் உடன்படிக்கை' (Islamabad Accord) என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், உடனடியாகப் போர்நிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட்டு, அடுத்த 15 முதல் 20 நாட்களில் நிரந்தரத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் பெரும் முட்டுக்கட்டையாக ஹோர்முஸ் நீரிணை விவகாரம் நீடிக்கிறது. தற்காலிக போர்நிறுத்தத்திற்காக இந்த முக்கிய நீர் வழியைத் திறக்க முடியாது என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்கா கடந்த மாதம் முன்வைத்த 15 அம்சத் திட்டத்தை "தர்க்கமற்றது" என்று கூறி ஈரான் நிராகரித்துள்ளது. தங்களின் நிபந்தனைகளைத் தயாரித்து வைத்துள்ளதாகவும், தகுந்த நேரத்தில் அவற்றை வெளியிடுவோம் என்றும் ஈரான் கூறியுள்ளது.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமைக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரான் மீது "நரகத்தைப் பொழிவோம்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA
ஹோர்முஸ் நீரிணை
பெப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரில் இதுவரை ஈரானில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்களன்று மட்டும் தெஹ்ரானில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோல், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை தற்போது ஈரானின் கட்டுப்பாட்டில் முடக்கப்பட்டுள்ளதால், உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.
பாகிஸ்தானின் இந்த இராஜதந்திர முயற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான ஈகோ மற்றும் அவநம்பிக்கையைத் தாண்டி வெற்றிகரமாக அமையுமா என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.