இஸ்ரேலின் அரச இலக்குகள் மீது ஈரான் விரைவில் தாக்குதல்
மேற்கத்திய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ஈரான் (Iran)நேரடியாகவும் இதுவரை நடக்காத வகையிலும், இஸ்ரேலின்(Israel) அரச இலக்குகளை தாக்கத் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் பெரும்பாலும் விரைவில் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பெரும் பிராந்திய போர் பதற்றத்தைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
இதன் முதல் படியாக, பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கொள்கலன் கப்பலை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினர் இன்று (13) கைப்பற்றியுள்ளனர்.
ஐஆர்ஜிசி சிறப்புப் படைகள் ஈரானிய கடல் பகுதிகளை நோக்கிச் சென்றுள்ளது. எனினும் இந்த கப்பல் கைப்பற்றப்பட்டதற்கான காரணத்தை, ஈரான் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, கடந்த வாரம் சிரியாவில் உள்ள ஈரானிய தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் இராணுவ தாக்குதலுக்குப் பதிலடியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலே இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ள ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) இஸ்ரேல் தனது தாக்குதலுக்கு "தண்டிக்கப்படும்" என்று பலமுறை எச்சரித்துள்ளார் .
இருப்பினும், இந்த எதிர் நடவடிக்கை எந்த வடிவத்தை எடுக்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இதற்கிடையில் ஈரான் அடுத்த 48 மணிநேரங்களில் ட்ரோன்கள் மற்றும் துல்லியமாக இலக்கை தாக்க கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியாகியிருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகின்றன.
இதேவேளை இஸ்ரேல் ஈரான் மற்றும் பாலஸ்தீன அரசு மத்தியில் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கும், தாக்குதலை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக பிரெண்ட் மசகு எண்ணெய் விலை, 1.8% அதிகரித்துப் பீப்பாய்க்கு 91 டொலருக்கும் மேல் உயரந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |