ஈரான் மீதான முற்றுகை நீடிப்பு: எரிசக்தி நிறுவனங்களுடன் ட்ரம்ப் அவசர ஆலோசனை
ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
செவ்ரான் (Chevron) உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் வொஷிங்டனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அமெரிக்காவின் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு விநியோகம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஈரான் மீதான போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை உயர்ந்து வருவது, வரவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆளும் குடியரசுக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் விலையைக் குறைக்கவும், உள்நாட்டு எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்யவும் ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
அதன் ஒரு பகுதியாக, அமெரிக்கத் துறைமுகங்களுக்கு இடையே சரக்குகளை ஏற்றிச் செல்ல வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் 'ஜோன்ஸ் சட்டத்தில்' (Jones Act) 90 நாட்களுக்குத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தைப்' (Defense Production Act) பயன்படுத்தி உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள சுற்றுச்சூழல் விதிமுறைகளைத் தளர்த்தவும் வெள்ளை மாளிகை ஆலோசித்து வருகிறது.
இந்தச் சந்திப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவின் எரிசக்தி ஆதிக்கத்தை (Energy Dominance) நிலைநாட்ட ஜனாதிபதி எடுத்து வரும் முயற்சிகளுக்கு எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கையாளவும், நுகர்வோருக்குச் சுமை ஏற்படாமல் தடுக்கவும் அரசு தொடர்ந்து இத்தகைய ஆலோசனைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.