இரவோடு இரவாக ஈராக்- அமெரிக்க தூதரகங்கள் மீது நடந்த தாக்குதல்கள்! 3 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு அறிவிப்பு
ஈரானுடன் நடைபெறும் போர்நிலை நீடித்து வரும் நிலையில், ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்கள், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் வசதிகளை குறிவைத்து, இரவில் இரண்டு தாக்குதல்கள் நடத்தியதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
எங்கள் தூதரகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த அதிர்ச்சிகரமான பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில், அமெரிக்காவுடன் தொடர்புடைய இடங்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும், பயங்கரவாதக் குழுக்கள் ஈராக் நிலப்பரப்பை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்துவதை தடுக்கவும், ஈராக் அரசு தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் பரிசு
ஈராக் அரசு தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், எங்கள் பணியாளர்கள் மற்றும் வசதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம், என்றும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள் நடைபெற்ற துல்லியமான இடங்கள் குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. CNN முன்பு வெளியிட்ட தகவலின்படி, US Embassy Baghdad, US Consulate General Erbil மற்றும் Baghdad Diplomatic Support Center ஆகியவை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக போரை தொடங்கியதிலிருந்து பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
மேலும், கடந்த வாரமே, ஈராக் நாட்டில் அமெரிக்க தூதரக வசதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து தகவல் வழங்குவோருக்கு அதிகபட்சமாக 3 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.