போர் நிறுத்தத்திலிருந்து விலக நேரிடும் ஈரான் எச்சரிக்கை
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்காவுடனான போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் 'தஸ்னிம்' செய்தி நிறுவனத்திற்கு தகவல் வழங்கிய முக்கிய அதிகாரி ஒருவர் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாக மத்திய கிழக்கு செய்தி இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல்களாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அத்துமீறல்கள் தொடர்ந்தால், அமெரிக்காவுடன் எட்டப்பட்ட உடன்படிக்கையிலிருந்து ஈரான் அதிகாரப்பூர்வமாக விலகும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்தத் திட்டத்தின் கீழ், லெபனானின் 'இஸ்லாமிய எதிர்ப்புப் படை' உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் மோதல்களை நிறுத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது.
ஆனால், இஸ்ரேல் அதனை வெளிப்படையாக மீறி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. புதன்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேல் லெபனான் மீது கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
வெறும் 10 நிமிட இடைவெளியில் பெய்ரூட், பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு லெபனான் ஆகிய பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களை இஸ்ரேலிய ராணுவம் தாக்கி அழித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமடைந்துள்ள இந்தத் தாக்குதல்களில், இதுவரை 1,530 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,812 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கடந்த 2024 நவம்பரில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த போதிலும், மார்ச் 2-ஆம் திகதி ஹிஸ்புல்லா நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் லெபனான் மீது தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது ஈரானின் இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு நேரடிப் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.