அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய ஈரான் அனுமதி மறுப்பு
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவினால் குண்டுவீசி தாக்கப்பட்ட தமது அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்தி முகவரகம் ஆய்வு செய்வதற்கு ஈரான் அனுமதி மறுத்துள்ளது.
இத்தகைய தாக்குதல்களுக்கு பிந்தைய காலக்கட்டத்திற்கான முறையான வழிகாட்டல்களை ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு முதலில் வெளியிட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி, புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை உறுதிப்படுத்தினார்.
அணுசக்தி நிலையங்கள் மீது குண்டு தாக்குதல்
ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட 12 நாள் மோதலின் போது, ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகியவற்றின் மீது அமெரிக்கா 'பங்கர்-பஸ்டர்' (Bunker-buster) ரகக் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்களில் அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் இராணுவத் தளபதிகள் உட்பட 430-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஈரான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேசப் பாதுகாப்பின் கீழ் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என ஈரான் கோருகிறது.
ஜெனிவா உடன்படிக்கையின்படி, அணைக்கட்டுகள் மற்றும் அணுமின் நிலையங்கள் போன்ற "ஆபத்தான சக்திகளைக் கொண்ட கட்டுமானங்கள்" மீது தாக்குதல் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம்
எவ்வாறாயினும், அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டிக்க ஐநா தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய ஈரான், அங்கு தங்கியிருந்த ஆய்வாளர்களை ஏற்கனவே வெளியேற்றியிருந்தது.

2015-ஆம் ஆண்டு எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஐநா தீர்மானம் 2231, கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டதாக ஈரான் ஐநா சபையில் தெரிவித்தது.இதனால் அந்த ஒப்பந்தத்திற்கு இனி சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என ஈரான் வாதிடுகிறது.
அரசியல் மற்றும் உளவியல் ரீதியான அழுத்தங்களுக்குப் பணிந்து முறையான கட்டமைப்பு இல்லாமல் ஆய்வுகளுக்கு அனுமதி வழங்க முடியாது," என முகமது எஸ்லாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.