ஹோர்முஸ் நீரிணை விவகாரம் விஸ்வரூபம் - உலக எண்ணெய் விநியோகத்திற்கு புதிய அச்சுறுத்தல்
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தாக்குதல் அதிகரிப்பு
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (US CENTCOM) நேற்றைய தினம்(11) ஈரானின் 140 இராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகள் குறிவைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) ஏவி, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ மையங்கள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளைக் குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க கட்டுப்பாட்டு மையம், குவைத்தில் உள்ள ரேடார் தளம், கத்தாரில் உள்ள போர்விமான பராமரிப்பு மையம் மற்றும் ஓமானில் உள்ள அமெரிக்க கடற்படை தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் கத்தாரில் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். மேலும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதால் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியமும் பெரும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்
இதேவேளை, ஓமன் கடற்பகுதியில் பயணித்த 'ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி' (GFS Galaxy) என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அதில் பயணித்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு இந்திய கடற்படை வீரர் காணாமல் போயுள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்த பகுதியில் அமெரிக்காவின் தலையீடு முடியும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் தெரிவிக்கும் நிலையில், உலகளவில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு எரிபொருள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தை உலுக்கி வரும் இந்த பிரச்சினையைத் தீர்க்க ஓமன் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தீவிர சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan