பதறும் மத்திய கிழக்கு..! ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா பயங்கர தாக்குதல்
ஈரானின் இராணுவ முகாம் ஒன்றை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் கருத்துத் தெரிவித்தாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
"ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி அச்சுறுத்தலாக இருந்த" நான்கு ஈரானிய ஒருவழித் தாக்குதல் ட்ரோன்களையும் தங்கள் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா பயங்கர தாக்குதல்
பந்தர் அப்பாஸ் நகரின் கிழக்குப் பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மூன்று மாதங்களாகத் தொடரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அமைதி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளை ஈரானும் ஓமானும் கூட்டாக நிர்வகிக்கும் என்று ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை அதிகாலையில் நிராகரித்தார்.
அந்த கடல் வழித்தடம் எப்போதும் திறந்தே இருக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா செயற்படுவதாக ஈரான் குற்றம் சுமத்தும் பின்னணியில், கடந்த திங்கட்கிழமையும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக "தற்காப்புத் தாக்குதல்களை" நடத்தியிருந்தது.
கடல் கண்ணிவெடிகளை விதைக்க முயன்ற படகுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் இதில் அடங்குவதாகவும், அவற்றால் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.