ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ரகசிய ஆயுத ஒப்பந்தம்
ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே 500 மில்லியன் யூரோ மதிப்பிலான ரகசிய ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் மாஸ்கோவில் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யா 500 "Verba" தோளில் சுமந்து ஏவக்கூடிய ஏவுகணை ஏவுதளங்களையும், 2,500 "9M336" ஏவுகணைகளையும் மூன்று ஆண்டுகளில் – 2027 முதல் 2029 வரை – கட்டங்களாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் கசிந்த ரஷ்ய ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தம் குறித்து அறிந்துள்ள பல்வேறு ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் அரச ஆயுத ஏற்றுமதி நிறுவனம் ரோசொபோரோநெக்ஸ்போர்ட் மற்றும் ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஆயுத தளவாட அமைச்சகத்தின் மாஸ்கோ பிரதிநிதி இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதமே இந்த ஏவுகணை அமைப்புகளை ஈரான் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்ததாகவும், ஒப்பந்த ஆவணங்களில் அதற்கான குறிப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், அமெரிக்க படைகள் ஈரானின் முக்கிய மூன்று அணு தளங்களைத் தாக்கியிருந்தன.
அப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ஈரானின் முக்கிய அணு நிலையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆரம்ப அமெரிக்க புலனாய:வு மதிப்பீட்டின்படி, அந்த தாக்குதல்கள் ஈரானின் அணு திறனை முழுமையாக அழிக்கவில்லை; சில மாதங்களுக்கு மட்டுமே பின்னடைவை ஏற்படுத்தியதாக அறிக்கைகள் கூறின.
இதற்கு பதிலளித்த ஈரான் அதிகாரிகள், “போரில் ஏற்பட்ட சேதத்திலிருந்து நாம் மீண்டு விட்டோம். எங்கள் திறன் முன்பை விட வலுவாக உள்ளது” என்று பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.
ரஷ்யா – ஈரான் இடையே மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தம் உள்ளபோதிலும், அதில் பரஸ்பர பாதுகாப்பு பிரிவு இல்லை.
இருப்பினும், இந்த மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்ய கடற்படை கப்பல் ஒன்று ஓமான் வளைகுடாவில் ஈரான் கடற்படையுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஏவுகணை ஒப்பந்தம், மேற்கு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சமநிலைக்கு புதிய பதற்றங்களை உருவாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனினும் இந்த ரகசிய ஆயுத ஒப்பந்தம் தொடர்பில் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri