என்பிபி அமைச்சர்களின் சொத்து விபரங்களில் மாற்றம்! விசாரணையில் இறங்கிய இலஞ்ச ஆணைக்குழு
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த அரசியல் பிரமுகர்கள் இருவரும் முன்னர் சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களுக்கும், பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரகடனங்களுக்கும் இடையில் சில வேறுபாடுகள் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டபூர்வமான வருமான மூலங்கள்
இதன்படி, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேலதிக சொத்துக்கள் எவை, அவற்றைப் பெற்றுக்கொண்டதற்கான சட்டபூர்வமான வருமான மூலங்கள் என்ன, அவை எவ்வாறு சம்பாதிக்கப்பட்டன என்பன தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த விசாரணைகள் சுயாதீனமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் மாதம் சிவில் உரிமைகள் செயற்பாட்டாளர் ஜமுனி கமந்த துஷார டி சில்வா என்பவரால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகளுக்கான பின்னணி உருவாகியுள்ளது.
முழுமையான விசாரணை
குறித்த முறைப்பாட்டில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அரசாங்கத்தின் ஆறு முக்கிய பிரமுகர்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும், ஆரம்பகட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தற்போது குமார ஜயகொடி மற்றும் சுனில் வட்டகல ஆகிய இருவரது கோப்புகள் மாத்திரமே முழுமையான விசாரணைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு மேலதிகமாக, முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நிலக்கரி கொள்வனவு விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலும் முன்னிலையாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவினால் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி அது தொடர்பான விளக்கங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
you may like this