இராமநாதபுரம் கிராமத்தில் யானை வேலி அமைக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராய்வு
கிளிநொச்சி- இராமநாதபுரம் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யானை வேலிகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதிகளில், சுமார் 05 கிலோமீற்றர் நீளமான யானை வேலிகளை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் மக்களுக்கும் காணி பிரச்சினை முரண்பாடு காரணமாக இதன் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பி.அஜிதா, கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன்,வனஜீவராசிகள் திணைக்கள கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று(25) குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.
காணி பிரச்சினை
காணி அனுமதிப் பத்திரம் உள்ள மக்களின் காணிகளை நிலஅளவைத் திணைக்களமூடாக அடையாளப்படுத்திய பின்னர் வனவளத் திணைக்களத்துடன் கலந்துரையாடி காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டது.
அதுவரை காணிகளை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
சட்ட நடவடிக்கை
மேலும், மக்களின் உறுதிக் காணிகளில் உள்வாங்காத பிரதேசம் ஊடாக யானை வேலிகளை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டு, குறித்த பகுதி மக்களுக்கு காண்பிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
மேலும் இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மேற்படி கிராமத்தில் காட்டுயானைகளால் தமது வாழ்வாதாரப் பயிர்கள் அழிக்கப்பட்டு வரும் அதேநேரம், உயிராபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும், பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
