கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரிடம் தீவிர விசாரணை!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நேற்றிரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய,கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட குறித்த குற்றவாளிகளில் கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறே நிலங்க ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகள்
அத்துடன் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றவாளிகள் நேற்றிரவு 7.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதேவேளை, குறித்த குற்றவாளிகளிடம் ஆழமான விசாரணைகள் இடம்பெறுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான பணிப்புரைகளை பொலிஸ்மா அதிபர் வழங்கியுள்ளார்.
அரசியல் தலையீடுகள்
இவ்வாறான குற்றவாளிகள் நாட்டு மக்களைக் கஷ்டப்படுத்தி மேற்கொள்ளும் குற்றச் செயல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று உறுதியளிப்பதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த 2 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைக் குறித்த குற்றவாளிகள் திட்டமிட்ட விதம் மற்றும் அதற்குப் பின்பாக இருந்த அரசியல் தலையீடுகள் தொடர்பிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



