மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பான வழக்கு விசாரணை! - சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும், இலுப்பைக்கடவை கிராம அலுவலகராகவும் கடமையாற்றிய கிராம அலுவலகரின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபரை எதிர் வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று புதன் கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் கிராம அலுவலகராகக் கடமையாற்றிய எஸ்.விஜியேந்திரன்( வயது-55) கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் புதன் கிழமை (17) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போதே விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினம் புதன் கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன் போது அவர்கள் தமது மேலதிக அறிக்கையினை மன்றில் தாக்கல் செய்திருந்தனர். இதன் போது விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் குறித்த சந்தேக நபர் தொடர்பான மருத்துவ அறிக்கை இன்றும் மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதனை சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.
மேலும் தாக்கியதாகக் கூறப்படும் இரும்பு கம்பியில் காணப்பட்ட இரத்த மாதிரிகள் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டிருந்தது.
குறித்த பகுப்பாய்வு அறிக்கையும் மன்றிற்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஞாபக கடிதம் ஒன்றைப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப மன்றிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அதற்கமைவாக குறித்த கடிதம் மீண்டும் அனுப்பப்பட்டு எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி (௦3.03.2021) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர் வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும், இலுப்பைக்கடவை கிராம உத்தியோகஸ்தராகவும் கடமையாற்றிய எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் கடந்த வருடம் 03.11.2020அன்று இரவு தனது கடமையை முடித்துக் கொண்டு தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
குறித்த கொலை தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



