தொலைந்து போன 19 ஆயிரம் புத்தகங்கள் - நிறுவனத்திடம் நஷ்டத்தை மீட்க திட்டம்
கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளராக மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் இன்று(14.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விநியோகத்தில் நடந்த தவறு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் போன பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள், ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டு வந்தன.
தற்போது தொலைந்து போனதாக கூறப்படும் புத்தகங்களின் மதிப்பை அந்த நிறுவனத்திடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதியன்று, கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர், திணைக்களத்தால் வழங்கப்பட்ட சுமார் 800,000 ரூபாய் மதிப்புள்ள பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள், திட்டமிட்டபடி விநியோக மையத்தில் ஒப்படைக்கப்படவில்லை என்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன 19 ஆயிரம் புத்தகங்கள்
கல்வி அமைச்சின் கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட, ஒன்றாம் வகுப்புக்கான 19,892 தமிழ் செயல்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் உரிய விநியோக மையத்திற்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடப் புத்தகங்களைக் கொண்டு செல்வதற்காக கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் போக்குவரத்து நிறுவனம், மே 4 ஆம் திகதி புத்தகங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதியைப் பெற்றிருந்தபோதிலும், அவை விநியோகிக்கப்பட வேண்டிய கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 மையங்களுக்குத் திட்டமிட்டபடி புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை என்றார்.