ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வு (Photos)
யுத்தத்தினால் காணாமல்போனவர்களின் உறவுகளுடனான கலந்துரையாடல், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் 43 நபர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெனாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியவர்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுடைய கருத்துக்களை கேட்டறிந்தனர்.
குறித்த விசாரணை ஆணைக்குழு அவர்களினுடைய தற்போதைய தேவைகளையும் கேட்டறிந்தனர்.
கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் காணொளி மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




