நாயக்க தேரர்களை சந்தித்த பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணை செய்யுமாறு கோரிக்கை
அரச வாகனங்களில், சீருடையுடன் தமது பிரதேசத்திற்கு வெளியே சென்று பீடாதிபதிகளை சந்தித்து ஊடகங்களின் முன்னிலையில் மிகவும் ஒழுக்கேடான முறையில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்திய உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டுமென, முன்னாள் அரச மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளது.
இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னக்கோன், தலைமை பீடாதிபதிகளை சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தம்மீது சுமத்தியுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
"இந்த இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் ஒழுக்கமற்ற மற்றும் சட்டவிரோதமான செயலைச் செய்துள்ளனர். உத்தியோகபூர்வ வாகனங்களில் சீருடையில் சென்று மூன்றாம் தரப்பினரிடம் சட்ட விடயங்களைப் பற்றி பேசியதும், பொலிஸ் மா அதிபரிடம் அனுமதி பெறாமையும் குற்றம்" என முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஜி.பி.கொடகதெனிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்தாமை பிரச்சினைக்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட நலனுக்காக சீருடை மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தியமை மற்றும் சீருடையிலேயே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை தவறு என முன்னாள் செயலாளர் அசோக பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவர்கள் நீதிமன்றங்களின் உதவியை நாடாமல் வேறு வழிகளில் தம்மை விடுவிக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அசோக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
"ஏனைய பொலிஸ் அதிகாரிகளுடன் இதுபோன்ற பயணங்ளை மேற்கொள்ள வேண்டுமெனின், பொலிஸ் மா அதிபரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறில்லாமல் உங்களால் உத்தியோகபூர்வ வாகனங்களில் இதுபோன்று சீருடையுடன் பயணிக்க முடியாது. பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஆணைக்குழுவும் இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்.” என முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மெரில் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு ஏதாவது ஒரு ஆணைக்குழு அல்லது நீதிமன்றத்தால் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கருதினால் அவர்கள் நீதித்துறையின் உதவியை நாடியிருக்க வேண்டுமென, பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சொன்றின் முன்னாள் செயலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக தமக்கு நீதி கிடைக்கும் என நம்பியதாகவும், எனினும் அவ்வாறு எதுவும் இடம்பெறாத நிலையில் தான் இந்த தீர்மானத்திற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நந்தன முனசிங்க "யாரும் எதுவும் சொல்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில், நீர்கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக ஜனாதிபதி ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளதோடு, மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக தாக்குதல் சமயத்தில் செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
