கிழக்கு மாகாணத்தில் அபகரிப்புக்குள்ளான காணிகள் தொடர்பில் ஆராயும் சந்திப்புக்கள்(Photos)
கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட நில அபகரிப்புக்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் தமது அமைப்பு கரிசனை கொண்டுள்ளதாக மனித எழுச்சி அமைப்பின் பணிப்பாளர் கே. நிஹால் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் மனித எழுச்சி அமைப்பு தற்போது தமது நடவடிக்கைகளை கிழக்கு மாகாணம் தழுவியதாக மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கும் விஸ்தரித்துள்ளது.
நில அபகரிப்புகள்
அதனடிப்படையில் சனி, ஞாயிறு வார இறுதி நாட்களில் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் காணிகளைப் பறிகொடுத்தோரையும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து காணிகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டது.”என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்களில் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை பற்றியும் அவற்றை
மீட்பதற்கான முன்னெடுப்புக்களில் கடந்து வந்த பாதை பற்றியும் கருத்துத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அதிருப்தி
இதன்போது, திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் தாம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக காணிகளைப் பறிகொடுத்தோர் சந்திப்புக்களில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த சந்திப்புக்களில் மனித எழுச்சி அமைப்பின் பணிப்பாளர், அதன் திட்ட இணைப்பாளர் எஸ்.ஆப்தீன், நிர்வாக செயற்பாட்டாளர் எம்.ஐ.உதுமாலெப்பை, ஏறாவூர் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளரும் பொது நிறுவனங்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான எம்.எல். அப்துல் லத்தீப், மூதூர் பிரதேச சபைத் தலைவர் எம்.எம்.ஏ. அறூஸ், மூதூர் காணிகளைப் பறிகொடுத்தோர் அமைப்பின் பிரதிநிதிகள், தோப்பூர் விவசாயிகள் சம்மேளன அங்கத்தவர்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.








