வடக்கில் சுகாதார துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாக காணப்படும் சுகாதாரப்பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளன.
முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வுகள் நாளை (03.08.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார்.
கட்டமைக்கப்பட்ட இந்த நேர்முகத்தேர்வுகள் நாளை திங்கட்கிழமை (03.08.2026) முதல் 21.08.2026 ஆம் திகதி வரை பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் நடைபெறவுள்ளன.
ஆறு விசேட குழுக்கள் நியமனம்
இதற்கென ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தினமும் மூன்று நேரப்பிரிவுகளாக இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதுவரை நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 05.08.2026 இன் பின்னர் 021 222 0807 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை சமர்ப்பித்து உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த 300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,548 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேர்முகத்தேர்வு குழுவினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கடுமையான சட்ட நடவடிக்கை
இதில் எழுத்துப்பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத்தேர்வில் வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளிக்கும் நியாயமான மற்றும் ஆதாரபூர்வமான காரணங்கள் இருக்க வேண்டும் எனவும், நியமிக்கப்பட்டுள்ள ஆறு குழுக்களும் எந்தவிதப் பாரபட்சமுமின்றி ஒரே மதிப்பீட்டு அளவு கோல்களையே பின்பற்ற வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
நேர்முகத் தேர்வின்போது அரசியல், நிர்வாக அல்லது வெளிப்புறத் தலையீடுகளுக்குத் துளியளவும் இடமளிக்கக் கூடாது எனவும், முறைகேடு அல்லது அதிகார துஷ்பிரயோகம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri