சிறுபான்மை மக்களினுடைய பாதுகாப்பு எப்போதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது - எம்.எம்.மஹ்தி
காலப்போக்கில் அரசியலுக்காகவும், சிறுபான்மை சமூகத்தின் மீது கொண்ட காழ்ப் புணர்ச்சியாலும் படிப்படியாக முஸ்லிம் தனியார் சட்டம் கேள்விக்கு உள்ளாக்கப்படும்" என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும், கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.
அவருடன் மேற்கொண்ட நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கேள்வி - பயங்கரவாத தடைச் சட்டம் தொடர் அமுலில் இருப்பதனால் சிறுபான்மை சமூகத்தில் உள்ள அரசியல் தலைமைகளின் கைது விடயம் தொடர்பில் ?
பதில் - உலகிலே எந்த நாட்டிலும் இல்லாத மிகக் கடினமான பயங்கரவாத தடைச்சட்டம் என்ற ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான இச் சட்டத்தை வைத்து மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்கள் தங்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, அவர்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலை விமர்சிப்பவர்களையும் அவர்களுடைய அரசியல் கொள்கைகளை எதிர்ப்பவர்களையும் முடக்குவதற்கும் தண்டிப்பதற்கும் பழி வாங்குவதற்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இதன் காரணமாக ஜனநாயகம் சட்டவாட்சி நீதித்துறையின் சுயாதீனம் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் மிகவும் கடினமானதாகக் காணப்படுகின்றது. கைது செய்யப்படுகின்ற சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருப்பதோடு, மேலும் தேவையேற்படின் மீண்டும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியையும் இந்த தடைச்சட்டம் வழங்குகின்றது.
ஆனால் இப் பயங்கரவாத தடைச்சட்டம் உண்மையாகவே பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டாக்குபவர்களை அல்லது அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களை, நிதி அனுசரணை வழங்குபவர்களைத் தண்டிப்பதற்காகவும் நாட்டை பாதுகாப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையான பயங்கரவாதிகள், உண்மையான குற்றவாளிகள் வெளியில் நடமாடுகின்ற போது அப்பாவிகளும் அரசியல் எதிர்க்கருத்துடையவர்களும் கைது செய்யப்பட்டு மிக நீண்ட நாட்களாகச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.
பெரும் பயங்கரவாத குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படுவதோடு விடுதலையும் செய்யப்படுகிறார்கள். . உண்மையான குற்றவாளிகள் சுயநல அரசியல் காரணிகளுக்காகப் பாதுகாக்கப்படுகின்றனர். விடுதலை செய்யப்படுகின்றனர். மன்னிப்பு வழங்கப்படுகின்றனர்.
அவ்வாறாயின் எதற்காகச் சட்டமும் நீதித்துறையும் என்கின்ற கேள்வியை எழுப்புகின்றது. ஆனால் சிறுபான்மை இனத்தவர்களும், அவர்களின் தலைவர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் செய்கின்ற குற்றவியல் சட்டத்திற்கு உட்படுகின்ற சிறிய குற்றச்சாட்டுகளைப் பயங்கரவாத தடைசட்டத்தை பயன்படுத்திப் பழி தீர்க்கின்ற, தண்டிக்கின்ற வேலைகளையே செய்துகொண்டிருக்கின்றனர்.
ஆகவே இவ்வாறான கடினமான ஜனநாயகத்திற்குச் சவாலான சட்டங்கள் இல்லாமல் செய்யப்படுவதோடு உலக நாடுகளின் ஜனநாயக ரீதியான வரையறைக்குள் சிறுபான்மை சமூகமும் எதிர் அரசியல் கொள்கை உடையவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.
கேள்வி - காதி நீதிமன்றம் ஒழிப்பு திருமணச் சட்டம் இது முஸ்லிம்களிடையே எவ்வகை பாதிப்பை ஏற்படுத்தும்?
பதில் - ஒவ்வொரு மனிதனும் மதக் கொள்கை கலாச்சாரம் பண்பாட்டியல் அடிப்படையில் பாரம்பரியமாகக் கட்டுப்பட்டுக் கொண்டிருக்கின்றான். ஒரே மத ,கலாச்சார அடிப்படையில் நாடு இருக்கின்ற போது அங்கு மாறுபட்ட கொள்கை உருவாகுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்.
ஆனால் பல சமூகம், பல கலாச்சாரம், பல மதங்கள் இருக்கின்ற நாடுகளில் ஒவ்வொரு கொள்கை மதரீதியான சட்டதிட்டங்கள் என்பவற்றிற்குக் கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.
அதன் அடிப்படையில் இலங்கையில் காலனித்துவ ஆட்சியின் போதும் அதன் பின்னரும் இன ,மத ,கலாச்சார விழுமியங்களுக்கு மதிப்பளித்து சட்டத்தால் கூட அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதனடிப்படையில் கண்டியச்சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் போன்ற சட்டங்களைக் கூட அங்கீகரித்து தாய்ச்சட்டத்தில் அனுமதித்து இருக்கின்றார்கள். காலப்போக்கில் அரசியலுக்காகவும், சிறுபான்மை சமூகத்தின் மீது கொண்ட காற் புணர்ச்சியாலும் படிப்படியாக முஸ்லிம் தனியார் சட்டம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் முஸ்லிம்களின் மத கலாச்சார அடிப்படையில் வரலாற்றிலே அங்கீகரிக்கப்பட்டிருந்த முஸ்லிம் தனியார் சட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற காழி நீதிமன்றம், திருமண சட்டம் என்பன சவால்களுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன.
முஸ்லிம் தனியார் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது துஷ்பிரயோகங்கள் அல்லது பாதிப்புகள் ஏற்பாடுமாக இருந்தால் அதற்கு வழிவகுக்கின்ற தனி நபர்களைத் தண்டிக்க வேண்டுமே தவிர வரலாற்றால் வழங்கப்பட்டிருக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தைக் கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியமில்லை முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாத்திரமல்ல நாட்டின் தாய் சட்டம் கூட சில வேளைகளில் விமர்சனங்களுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன.
அதற்காக ஒட்டுமொத்த தாய் சட்டத்தையும் அகற்றிவிட முடியாது. ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்தின் மீது மாத்திரம் கூடுதல் கரிசனை காட்டப்படுவது ஜனநாயகத்துக்கு முரணாக இன் நாட்டிலே முஸ்லிம்களின் மத கலாச்சார அடிப்படையிலான அபிலாசைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு இன நல்லுறவையும் பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது.
கேள்வி - சிறுபான்மை சமூகத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பங்களிப்பு எப்படியானது?
பதில் - இலங்கை தேசம் பல்வேறு மொழி பேசுகின்ற மத ,கலாச்சார இன மக்கள் வாழுகின்ற நாடாகும். பெரும்பான்மையாகச் சிங்கள மக்களும் சிறுபான்மையாகத் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மலையக மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நாட்டின் சுதந்திரத்திற்குப் பெரும்பான்மை தலைவர்களோடு, சிறுபான்மை தலைமைகளும் இணைந்து போராட்டங்களை நடாத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள்.
பெரும்பான்மை தலைவர்களையும், அரசர்களையும், மன்னர்களையும் பாதுகாக்கின்ற விடயங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமூகமும் வரலாற்றில் மறக்க முடியாத பங்களிப்பைச் செய்ததோடு உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.
இந்நாட்டின் அபிவிருத்தியில் மருத்துவத்துறை பொருளாதாரத் துறை கட்டத்துற வணிகத்துறை ஏற்றுமதி, இறக்குமதி போன்ற எல்லா வகையிலும் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் நல்ல பெரிய பங்களிப்பைச் செய்து இருக்கின்றார்கள்.
சிறுபான்மை சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய பெரும்பான்மை அரசியல் தலைமைகள் தங்களுடைய சுயநல அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு அமையச் சிறுபான்மை மக்கள் மீது வீண் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பணி வாங்குகின்ற சம்பவங்களை அண்மையில் காணக்கூடியதாக இருக்கின்றது.
வைத்தியர் சாபி மீதான பொய்க் குற்றச்சாட்டு, ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலை முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தியமை கண்டி திகனயில் 3 குடிகாரர்கள் செய்த குற்றத்திற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பொருளாதாரத்தைத் திட்டமிட்டு அழித்தமை, கருத்தடை இரசாயனம் கலக்கப்பட்டதான அம்பாறை கொத்து ரொட்டி பிரச்சினைகளை உதாரணமாகக் கூறலாம்.
இவை அனைத்தும் அரசியல் நோக்கங்களுக்காகச் சிறுபான்மை சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட வீணான குற்றச்சாட்டுக்களாகும். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்பன சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்காகத் திட்டங்களைத் தீட்டி அவர்களை அரவணைப்பதில் போட்டிப் போடுகிறார்கள்.
அதில் ஒரு கட்சி வெற்றி பெற்றாலும் அடுத்த கட்சி அவர்களை எதிர்க்கின்ற நிலைமை உண்டாகின்றது. தற்போதைய ஆளுங்கட்சிக்குச் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் பெரும்பான்மையாகக் கிடைக்கவில்லை என்பதற்காகச் சிறுபான்மை மக்கள் மீது பாதுகாப்பற்ற சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள்.
ஆனால் சிறுபான்மை மக்கள் மீது வீணாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களும் முஸ்லிம் தலைமைகள் கைது செய்யப்பட்டமையும் சர்வதேச ரீதியில் இலங்கையைத் தலைகுனியச் செய்ததோடு ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தோல்வியையும் ஏற்றுக்கொண்டது.
பல்லின மக்கள் வாழுகின்ற எமது நாட்டில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப் பட வேண்டும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு ஆளும் தரப்பினரின் அரசியல் எதிர்பார்ப்பில் தங்கியுள்ளது என்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒன்றாகும்.
ஆகவே சிறுபான்மை மக்களினுடைய பாதுகாப்பு எப்போதும் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
