அரச உயர் அதிகாரி ஒருவரை பதவி நீக்குவதில் அமெரிக்க தூதரகத்தின் தலையீடு
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலையீட்டின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவனம் ஒன்றின் சிரேஷ்ட அதிகாரியை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் கடுமையாக அழுத்தங்கள் காரணமாக இந்த மாத இறுதியில் அந்த அதிகாரியை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கை ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சிரேஷ்ட அதிகாரியின் சேவை காலத்தை நீடிக்கும் கடிதத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன (Kamal Gunaratne) கையெழுத்திட்டுள்ள போதிலும் கண்ணுக்கு புலப்படாத மறைக்கரம் ஒன்றின் நடவடிக்கை காரணமாக அந்த கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இயங்கும் 33 அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வருடாந்தம் 5 மில்லியன் டொலர்கள் கிடைத்து வருவதாக மேற்கூறிய அதிகாரி கண்டறிந்திருந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி ட்ரெவிஸ் கார்ட்னருக்கு (Travis Gardner) விசா வழங்க மறுத்தமை மற்றும் வடக்கில் தமிழர் ஒருவருடன் இணைந்து கார்ட்னர் முன்னெடுத்த இரகசியமான திட்டம் பற்றிய தகவல்களை கண்டறிந்த இந்த சிரேஷ்ட அதிகாரி, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்திருந்ததாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.