சர்வதேச ரோல் போல் உலக கிண்ண போட்டியில் சாதித்த மன்னார் வீர வீராங்கனைகளுக்கு கெளரவிப்பு
2025 ஆண்டுக்கான உலக கிண்ண இளையவர் போட்டி மற்றும் பெரியோருக்கான ஆசியன் ரோல் போல், ( Roll ball) அணியில் மன்னார் மாவட்டம் சார்பாக இலங்கை அணிக்கு தெரிவாகி சர்வதேச ரீதியில் மூன்றாம் இடம்பெற்று கொண்ட வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு ரோல் போல் சங்க மன்னார் கிளை தலைவர் விமலேஸ்வரன் தலைமையில் (03) மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகள் மாலை அணிவிக்கப்பட்டு மன்னார் நகர மண்டபம் நோக்கி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை கென்யா நைரோபியில் இடம்பெற்ற ரோல், போல் உலக கிண்ண போட்டிக்கு தெரிவான இலங்கை அணியில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மூன்று யுவதிகளும் 4 இளைஞர்களும் தெரிவாகி கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போட்டியில் இலங்கை அணி மூன்றாவது இடத்தை பெற்ற நிலையில் குறித்த அணியில் விளையாடி திறமையை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகள் கெளரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர், மன்னார் நகரசபை தலைவர், மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அதிபர், சமூக சேவையாளர் அகஸ்ரி உட்பட ரோல் போல் வீரர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


