படுகொலைகளின் சாட்சியமே செம்மணி- சர்வதேச விசாரணை நிச்சயம் அவசியம்! தேசிய சமாதான பேரவை வலியுறுத்து
செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் என்புக்கூடுகள், படுகொலைகளின் பிரதான சாட்சியங்களாகவே அமைந்துள்ளன. ஆதலால், இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை அவசியம் என்று தேசிய சமாதான பேரவையின் நிர்வாக இயக்குநர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
"இலங்கையில் தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வாழ்கின்ற நிலையில், செம்மணிப் புதைகுழி விவகாரம் பேசுபொருளாக அமைந்துள்ளது.
செம்மணிப் புதைகுழி
செம்மணியில் மீட்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் திட்டமிட்ட படுகொலைகளின் சாட்சியங்களாகவே அமைந்துள்ளன.
அரசாங்கங்களை இனியும் நம்புவதற்குத் தமிழ் மக்கள் தயாரில்லை. ஆதலால்தான், அவர்கள் செம்மணிப் புதைகுழி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சர்வதேசத்திடம் நீதியைக் கோருகின்றனர்.
இதில் எந்தத் தவறும் இல்லை. எம்மைப் பொறுத்தவரை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக, வெளிநாடுகளில் இருந்து நடைமுறைச் சாத்தியமான நிபுணத்துவத்தைப் பெறுவது மிகவும் அவசியம்.
ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, செம்மணிப் புதைகுழி தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்கும் நிலையில் உள்ளது.
இந்த விடயத்தில், நிபுணத்துவம் மிக்கதும் மிக நேர்மையானதுமான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.




