இஷாரா செவ்வந்தியின் கைது! பின்னணியை வெளியிட்ட பொலிஸார்
நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் நேபாளத்திற்கு ஒரு சிறப்புக் குழு அனுப்பப்பட்டதாகவும்,இது ஒரு நீண்டகால ரகசிய நடவடிக்கை என்றும் பொலிஸ் ஊடகதொடர்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை பொலிஸ்துறை வாரங்களுக்குள் இரண்டாவது பெரிய சர்வதேச கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, நாடு முழுவதும் பல கொலைகள் தொடர்பாக தேடப்படும் பிரபல பெண் சந்தேக நபரை கைது செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு அறிவிப்புகள்
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தப்பியோடியவர்களுக்காக இலங்கை பொலிஸாரால் 40ற்கும் மேற்பட்ட சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் மட்டும், 18 சந்தேக நபர்கள் வெற்றிகரமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தலைமையிலான இரகசிய நடவடிக்கையைத் தொடர்ந்து, ஐஜிபியின் நேரடி தலையீட்டின் மூலம் சமீபத்திய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி இதுவரை நாட்களும் தலைமறைவாக இருந்தார்.
முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதே நாளில் சிலாபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இஷாரா செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
பல கொலைகளுடன் தொடர்பு
அதனை தொடர்ந்து சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டநிலையில் நேபாள சட்ட அமலாக்கம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் புலனாய்வுப் பிரிவுகளின் ஆதரவுடன், அவர் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இஷாரா செவ்வந்தி கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடையவர் மட்டுமன்றி இலங்கை முழுவதும் பல கொலைகளைத் திட்டமிட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறார்.
மேலும், இந்த கைது நடவடிக்கை்கு ஆதரவாகவிருந்த நேபாள அரசாங்கத்திற்கும் அவர்களின் சட்ட அமலாக்கத்திற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும் வூட்லர் குறிப்பிட்டுள்ளார்.



