ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள்
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கு எதிராக, மூன்று இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் வசந்த முதலிகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆகியோரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை மீறல்
இந்தநிலையில் , சட்டத்தை தவறாக புரிந்துக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் -விஜித ஹேரத், அந்த மனுவை ஆரம்பத்திலேயே நிராகரிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பாணந்துறையைச் சேர்ந்த வர்த்தகர் சமிந்திர தயான் லெனாவ, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை தேர்தல் நடத்தப்படுவதை தடுக்குமாறு கோரி, ஏற்கனவே அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
எனினும் அரசியலமைப்பின், 19 ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பின் 30(2) சரத்து திருத்தப்பட்டு ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்களில் இருந்து ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் தமது இடையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விதிமுறைகள்
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 3ஆவது பிரிவின்படி ஜனாதிபதியின் சட்டபூர்வமான பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும்.
எனவே இந்த விதிமுறைகளுக்கு இணங்க 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ஹேரத் கோரியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடைகிறது. இதன் காரணமாக சட்டத்தின்படி 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது கட்டாயமாகும் என்று மனுதாரராக விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |