முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிப்பு
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு ஜூன் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் எம்.ஏ.ஆர் மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் வழக்கு நடைபெற்றுள்ளது.
இதன்போது முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இடைக்கால உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள்
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அவர் முன்னர் வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காகவே தாம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
எனினும், தான் சட்டமா அதிபராக இருந்த காலத்தில் தாம் செய்த செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்ப காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள டி லிவேரா, இது சட்டமா அதிபர் ஒருவரின் சிறப்புரிமைகளை மீறுவதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தன்னை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் அவர் கோரியுள்ளார்.
மனு மீண்டும் விசாரணை
எவ்வாறாயினும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பிரதிவாதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமானது.
அதற்காக
கிட்டத்தட்ட ஒரு மாத கால அவகாசம் தேவை எனவும் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக
மன்றாடியார் நாயகம் பரிந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர் தரப்பு, இந்தக் கோரிக்கை குறித்து எந்த ஆட்சேபனையும்
தெரிவிக்கவில்லை,
இதனையடுத்து 2023, ஜூன் 22 அன்று மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள
நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.



