அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் - மன்னாரில் சர்வமத தலைவர்கள் கோரிக்கை
சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி அரசாங்கத்திடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில் சர்தவ மத தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னாரில் இன்று (24.09.2026) மாலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் சர்வமத பேரவையின் தலைவர் சிவ சிறி தர்மகுமார குருக்கள், மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி ஏ.எஸ்.எம்.அசீம், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.
மரண தண்டனை விதிப்பு
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மன்னார் சர்வமதப் பேரவையின் சார்பாகவும், மன்னார் பிரஜைகள் குழுவின் சார்பாகவும் இந்த இடத்திலே, குறிப்பாக எங்களுக்குத் தெரியும் கடந்த இரண்டு வார காலமாக எமது இலங்கைத் திருநாட்டில் பேசுபொருளாக மாற்றப் பட்டிருக்கின்ற சகோதரர் அனோஜன் மீது விதிக்கப்பட்டிருக்கின்ற மரண தண்டனை சம்பந்தமாக, குறிப்பாக எமது நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
முகப்புத்தக பதிவின் காரணமாக, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதான அந்த அவதூறு வார்த்தை காரணமாக, சவுதி அரசாங்கத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தண்டனை நீக்கப்பட வேண்டும், மன்னிக்கப்பட வேண்டும், அவருக்கு வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த உலகத்திலே வழங்கப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த இடத்திலே நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம்.
எனவே அவர் பாவித்த அந்த வார்த்தைகள் என்பது, அது பாவிக்கப்பட்டு இருக்கக் கூடாது. உலக முஸ்லிம்களுடைய உள்ளங்களை துன்புறுத்தக் கூடிய, நோவினை படுத்த கூடிய அந்த வார்த்தையை, மனிதநேயத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மன்னித்தாலும் கூட, இது சவுதி அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை என்ற அடிப்படையில் அவருக்கு மன்னித்து மறுவாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பத்தை சவுதி அரசாங்கம் தான் நிச்சயமாக வழங்க வேண்டும்.

மறுவாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பம்
மன்னர் வழங்க வேண்டும். எனவே நாங்கள் அந்த அடிப்படையில் சகல சமயத்தவர்களும் இந்த இடத்திலே ஒன்று கூடி, அவருடைய அந்த மறுவாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று சர்வமத அமைப்பின் சார்பாக இந்த இடத்திலே கௌரவமாக சவுதி அரசாங்கத்திடம் நாங்கள் விடுக்கின்றோம்.
அத்துடன் எமது நாட்டு அரசாங்கம் அவருடைய விடுதலைக்காக, தண்டனைக் குறைப்புக்காக தன்னாலான ராஜதந்திர பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதேபோன்று இந்த நாட்டு முஸ்லிம்கள் சார்பாகவும், பள்ளிவாசல் சமூகங்கள், அதேபோன்று அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் ஊடாகவும் இப்படியான பணிகளும் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதை நாங்கள் அறிகிறோம்.
எனவே அந்த அடிப்படையில், மன்னார் மாவட்ட மக்கள் சார்பாகவும் நாங்கள் இந்த இடத்திலே மிக பணிவாக மீண்டும் ஒருமுறை சவுதி அரசாங்கத்திடம் நாங்கள் எங்களுடைய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றோம். அதேபோன்று எங்களுடைய நாட்டு அரசாங்கத்தினுடைய அந்த முயற்சிக்கும் ஒத்துழைப்பை வழங்குகின்றோம்.
மீண்டும் அவர் அந்த மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னிக்கப்பட்டு வந்து சமய சகவாழ்வுக்கான தன்னுடைய பங்களிப்பை வழங்குவதற்கான மனமாற்றத்தை இறைவன் அவருக்கு வழங்க வேண்டும். எனவே அவருக்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த இடத்திலே கேட்டு, அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளனர்.