முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74 சதவீதமான கணனிகள் செயலிழப்பு - ரவிகரனின் கோரிக்கைக்கு பிரதமர் பதில்
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84% கணனிகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், 82.76% பல்லூடக எறிவை (Multimedia Projector) செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களுக்கு தொழில்நுட்பக் கல்வியை தொடர்வதற்கான உபகரணங்கள் இதுரை கிடைக்கவில்லை என்றும், வரும் 2027ஆம் ஆண்டில் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அதற்காக 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் தம்மால் முன்மொழியப்படவிருக்கின்ற ஐந்து வருடகால கருத்திட்டத்தினூடாக தகவல் தொழில்நுட்ப வள நிலையம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் பதிலளித்துள்ளார்.
அத்துடன், திருத்தம் செய்யக்கூடிய உபகரணங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும், திருத்த முடியாத உபகரணங்கள் உள்ள இடங்களுக்கு புதிய உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(08.10.2026) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான வளங்கள் குறைவு
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பிரதமர் அவர்களே, அரசாங்கத்தால் தீவளாவிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களில் சில கல்வி வலயங்களும் சில மாவட்டங்களும் விடுபட்டிருப்பதென்பது குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல அளவீடுகளிலும் “இல்லை” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பது துரதிஸ்டவசமானது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஆறு கல்வி வலயங்களில் முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களில் இவ்வாறான கணினி வள நிலையங்கள் இல்லை என்று அறிகின்றோம்.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 74.84%கணினிகள் செயலிழந்த நிலையில் உள்ளன. 82.76% பல்லூடக எறிவைகள் செயலிழந்த நிலையில் உள்ளன.
இது வடமாகாணத்தில் உள்ள 13 கல்வி வலயங்களிலும் மிகவும் பின்னடைவான புள்ளிவிபரமாக உள்ளது. இப்படி அதிகப்படியான கணினிச் சாதனங்கள் செயலிழந்தால் கணினி மயப்பட்ட கற்பித்தலை எவ்வாறு பாடசாலைகளில் வினைத்திறனாக கொண்டு செல்ல இயலும்.
ஒரு வலயத்தில் அமையப்பெறும் கணினி வள நிலையம் இவ்வாறான கணினி வளங்களின் தொடர் பராமரிப்புக்கு வலுச்சேர்ப்பதோடு அவ்வலய ஆளணியின் தகவல் தொழினுட்ப அறிவூட்டலுக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்கும்.
எனவே, தயவுசெய்து, இவ்வாறு பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருக்கும் தகவல் தொழினுட்ப வள நிலையத்தை 2027ஆம் ஆண்டில் நிறுவித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
தொழில்நுட்பக் கல்விக்கான வசதிகள் விரைவில்..
இந்த விடயத்திற்கு பிரதமர் பதிலளிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்ட இந்தக் கேள்வி நியாயமானது. விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் சில மாகாணங்களில் போதியளவு கணனி வள நிலையங்கள் இல்லை.
அத்துடன், 2026ஆம் ஆண்டு கணக்காய்வுகளை மேற்கொண்டபோது 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் எந்தவிதமான புதிய உபகரணங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை அறியமுடிகின்றது.

ஏற்கனவே வழங்கப்பட்ட பழைய உபகரணங்களே அங்கு காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் தெரிவிக்கப்பட்ட விடயம் உண்மையானது. ஆகவே தான் நாம் ஐந்துவருட கருத்திட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். அந்தக் கருத்திட்டத்தை 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழிய விருக்கின்றோம்.
அந்தவகையில், திருத்தம் செய்யக்கூடிய உபகரணங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும், திருத்த முடியாத உபகரணங்கள் உள்ள இடங்களுக்கு புதிய உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இருமொழிக் கல்வியைப் பாடசாலைகளில் ஆரம்பித்து அவற்றுக்கான வசதிகளை வழங்குவதுடன், அந்த வலயங்களிலுள்ள நிலையங்களை மேம்படுத்துவதற்கும் ஐந்து வருட கால செயற்றிட்டத்தினை முன்வைக்கவிருக்கின்றோம் என்றார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan