இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பல் 'ஐ.என்.எஸ் தரங்கிணி' இலங்கை வருகை
இந்தியக் கடற்படையின் ‘நட்புறவுப் பாலங்களை கட்டியெழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பலான ஐஎன்எஸ் தரங்கிணி (INS Tarangini) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
இந்தக் கப்பல் பெப்ரவரி 27 முதல் மார்ச் 02 வரை திருகோணமலைக்கும், மார்ச் 06 முதல் 09 வரை கொழும்புக்கும் விஜயம் செய்யவுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் (IFR 2026) பங்கேற்றுத் திரும்பும் இக்கப்பல், கமாண்டர் நிதின் கஜ்ஜார் தலைமையில் இயங்குகிறது.
பாய்மரக் கப்பல் பயிற்சி
இந்த விஜயத்தின் போது, இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு துறைமுக மற்றும் கடல்சார் கட்டங்களில் பாய்மரக் கப்பல் பயிற்சி மற்றும் அனுபவங்களை வழங்கவுள்ளது.

நவீன இயந்திரங்கள் மற்றும் எரிவாயு விசையாழிகள் கொண்ட தற்காலத்திலும், பாய்மரக் கப்பல்களை இயக்கும் உலகின் சில கடற்படைகளில் இந்தியக் கடற்படையும் ஒன்றாகும்.
கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட இக்கப்பல், சுமார் 54 மீட்டர் நீளமும் 500 டன் எடையும் கொண்டது.
கடல்சார் பயிற்சி
இதில் 20 பாய்கள் (Sails) மற்றும் 20 கிலோமீட்டர் நீளம் கொண்ட 200 கயிறுகள் உள்ளன. 2004-ல் உலகைச் சுற்றி வந்த முதல் இந்தியக் கப்பல் என்ற பெருமையைப் பெற்ற ஐஎன்எஸ் தரங்கிணி, இதுவரை பல சர்வதேச கடல்சார் போட்டிகளில் வென்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் பயணத்தின் போது, இலங்கை கடற்படையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மற்றும் 25 பயிற்சி அதிகாரிகள் இதில் இணைந்து கடல்சார் பயிற்சிகளைப் பெறவுள்ளனர்.
இந்த முயற்சி இரு நாட்டு கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பையும், சாகச உணர்வையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.