ஞானசார தேரரின் அங்கி அகற்றப்பட்ட விவகாரம் – கம்மன்பிலவின் அறிக்கை குறித்து விசாரணை
கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் இருந்தபோது, அவரது அங்கி அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கூற்றுகள் மீது விசாரணை தொடங்கப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று(13.10.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சிறைச்சாலை திணைக்கள பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்த பிறகு இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை குறித்து விசாரணை
நேற்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஒரு ஊடக மாநாட்டைக் கூட்டி, ஞானசார தேரரின் அங்கி களையப்படுவதை ஒரு அரசாங்கத் தலைவர் தனது கைபேசியில் பார்ப்பதற்கு சிறை அதிகாரி ஒருவர் அனுமதி அளித்ததாகத் தெரிவித்தார்.

அதன்படி, இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவு குறித்த ஊடக சந்திப்பில், ஒரு ஊடகவியலாளர் இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்திற்குக் கொண்டுவந்தபோது, சம்பந்தப்பட்ட சம்பவம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத ஒன்று என்பதால், அது தொடர்பான அறிக்கை குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸார் இதுபற்றி ஓர் விசாரணையை நடத்தும். அவ்வாறு செய்த பின்னர், இச்சம்பவம் தொடர்பான உண்மைகளும், அப்படி ஒரு சம்பவம் நடந்ததா, அது எவ்வாறு நடந்தது என்பதும் வெளிப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.