கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்க வேண்டும்! கர்தினால் கோரிக்கை
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரணை செய்யுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், சில நாடுகள் போதைப்பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களை மறைத்து வைத்திருப்பதாகவும், இதனால் வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்கள் உருவாக்கி, பரவி வருவதாகவும், அவை மற்ற நாடுகளுக்கு பரவுவதாகவும் குற்றம் சாட்டினார்.
கந்தான புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற கிறிஸ்துமஸ் ஆராதனையின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “சுகாதார வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் பின்பற்ற சிலர் அக்கறைகொள்ளவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொருவரும் சுகாதார வழிகாட்டுதல்களை தங்களது பிரதான பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று தானாக உருவானது என மக்கள் கருதமுடியாது.
பொருளாதார வளம் என்பது சமூகத்தின் சிறிய குழுவினரின் கரங்களிலேயே காணப்படுகின்றது. கொரோனா வைரஸ் வறிய மக்களை மோசமாக பாதித்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.