காத்தான்குடியில் இரண்டாவது தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பம்
மட்டக்களப்பு - காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் சினோபாம் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று(10) ஆரம்பமாகின.
கடந்த மாதம் 15ம் திகதிக்கு முன்னர் முதலாவது தடுப்பூசியைப் போட்டவர்களுக்கு இன்று இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீல் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள 04 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளில் இத் தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அன்வர் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் புதிய காத்தான்குடி 06 மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையிலும், இக்பால் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் காத்தான்குடி 05 ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலிலும், சுகதா பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் காத்தான்குடி 01 மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயிலும், பதுறியா பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் புதிய காத்தான்குடி 01 பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயிலிலும் தடுப்பூசிகள் போடப்பட்டன.
கடந்த மாதம் ஜூலை 15ஆம் திகதிக்கு முன் முதலாவது முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீல் மேற்பார்வையில் இடம் பெற்ற இத் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர்களும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.










