தென்னிலங்கை அரசியல்வாதி படுகொலையில் சந்தேகநபர்கள் தொடர்பில் முக்கிய தகவல்
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வாகன ஒட்டுநர் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு பன்னிபிட்டிய பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து கொலையைத் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய ஓட்டுநர் சுமார் இரண்டு வாரங்களாக தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு பல்வேறு பெண்கள் இரவில் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி சில நாட்களுக்கு முன்பு மாத்தறையிலிருந்து வந்த தனது நண்பர் ஒருவர் இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்க வேண்டும் என்று அவர் ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
தங்குமிடம் வழங்கப்பட்ட பின்னணி
பின்னர் அந்த நபரை சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற சந்தேக நபர், ஹோட்டலில் தங்குமாறு கோரியிருந்தார்.
அங்கு ஹோட்டல் ஊழியர்கள் பதிவு செய்வதற்கு அவரது அடையாள அட்டை தேவை என்று கூறியிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்குரிய ஒட்டுநர், அந்த நபரின் அடையாள அட்டை தொலைந்து போனதால், அறையை தனது சொந்த பெயரில் பதிவு செய்யுமாறு கேட்டுள்ளார்.
அதன்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபருக்கு அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் தங்குமிடம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்
இவ்வாறு தங்கியிருந்த ஓட்டுநர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நேற்று (12) காலை ஹோட்டலில் இருந்து வெளியேறுவது ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பனா மந்திரி எனப்படும் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவை படுகொலை செய்வதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த வாகனம், அதன் சாரதியுடன் நேற்று (12) பிற்பகல் தலங்கம, பாலம் துன் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் சடலம் நேற்று (12) இரவு , வட்டரேகா, சோமரத்தன மாவத்தையில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



