நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்த்தும் உரை குறித்து வெளியிடப்பட்ட தகவல்
உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தும் உரைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என ஊடகவியலாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அது அவர்களின் சிறப்புரிமை. ஆனால், தவறான தகவல்கள் மற்றும் பொய்க் குற்றச்சாட்டுக்களை உயர் அரச அதிகாரிகள் மீதோ அல்லது அமைச்சர்கள் ஏனைய உறுப்பினர்கள் மீதோ சுமத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரி மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள்
மேலும், உரிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்து, சம்மந்தப்பட்ட உயர் அரச அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பினர் ஒருவர் சபாநாயகரிடம் கோரலாம் .
அது அந்த உறுப்பினருடைய சிறப்புரிமை. ஆனால், முன்வைக்கப்பட்ட தகவல் தவறாக இருந்தால், அந்த அதிகாரி மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்கம் செய்யப்படும்.
அந்த பொய்க் குற்றச்சாட்டுப் பற்றி மற்றொரு உறுப்பினர் சபாநாயகரிடம் ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்பி சுட்டிக்காட்டினால் மாத்திரமே ஹன்சாட் அறிக்கையில் இருந்து உடனடியாக அது நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊடகங்களிலும் அக்குற்றச்சாட்டுக்களை வெளியிட முடியாத நிலை ஏற்படும்.
ஆகவே, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை விதிகளின் தந்தையான ஏர்ஸ்கின்மே (Erskine May) உருவாக்கிய விதிகளின் பிரகாரம் உரிய ஆதாரம் இல்லாமல் எந்த ஒரு உறுப்பினரும் எந்த ஒரு அரச உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்த முடியாது.
பொறுப்பற்ற உரைகள்
உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையின் பிரகாரம் அவருடைய உரைகளில் குறிப்பிடப்படும் விடயங்களை உறுப்பினர்கள் தவிர்ந்த வெளியில் உள்ள உயர் அரச அதிகாரிகளோ அல்லது பொதுமக்களோ கேள்விக்கு உட்படுத்த இயலாது என்ற ஒரு காரணத்துக்காக, ஆதாரமற்ற – பொறுப்பற்ற உரைகளை நிகழ்த்த முடியாது.
இதனை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் புதிய உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வட பகுதியில் மருத்துவ மாபியாக்கள் உருவெடுக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
ஆனால், இப்படியான ஆதாரமற்ற மற்றும் தனிப்பட்ட ரீதியில் ஓரிருவர் மீது காழ்ப்புணர்வுடன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மருத்துவ மாபியாக்களை காப்பாற்றுவதாகவே அமைந்து விடும்.
அதேநேரம், Mental Disorder (மன நலக் கோளாறு) என்று ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினரைப் பார்த்து நாடாளுமன்றத்தில் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உடனடியாக மற்றொரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்பி சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அல்லது மருத்துவர் அர்ச்சுனா அதனை உடனடியாக சுட்டிக்காட்டி இவ்வாறு கூறியதற்கு மருத்துவ ஆதாரம் உள்ளதா என்று வினவியிருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கு வெளியில் நிகழ்த்தும்...
ஆனால், அர்ச்சுனா மீதுள்ள அதிருப்தியில் எந்த ஒரு உறுப்பினர்களும் இவ்வாறு கோரவில்லை.
எனினும் நிலையியற் கட்டளை விதிகளின் பிரகாரம் அந்த வார்த்தை ஆபத்தானது. இருந்தாலும், உறுப்பினர் ஒருவர் அதுவும் சிங்கள உறுப்பினர் ஒருவர் அவ்வாறு ஆவேசமாகச் சொல்லியிருக்கிறார் என்றால், அது தனது நடத்தைக் கோளாறுதான் காரண - காரியம் என்பதை அர்ச்சுனா புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, ஏதாவது அரசியல் கொள்கை இருக்க வேண்டும். அல்லது கொள்கையே இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நடத்தையிலும் பேச்சிலும் நாகரிகம் இருக்க வேண்டும்.
எனினும், உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியில் நிகழ்த்தும் எந்தவொரு ஆதாரமற்ற உரைகள் - குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஊடகவியலாளர் நிக்ஸன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |