வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரதான பாதாள உலகக்கும்பலின் உறுப்பினர் கைது
இலங்கையின் பிரதான பாதாள உலகக் கும்பலில் அங்கம் வகித்த 'அங்கொட லொக்காவின் பிரதான சகா போலி கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக அண்மையில் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி அடையாள இயந்திரத்தின் மூலம் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் ‘சிட்டி’ என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட தகவல்
இவர் 10 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தியமை தொடர்பில் முல்லேரிய பொலிஸ் நிலையத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, போலி பெயரில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் 10 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், 2011 ஆம் ஆண்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் ஒருவரை சுட்டுக் கொன்றமை, துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |