வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகிய மற்றுமொரு தகவல்
மியான்மாரில் (Myanmar)பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இலங்கையர்களை மனித கடத்தலில் ஈடுபடும் சீனக் குற்றவியல் குழுக்கள், மியாவாடி நகருக்கு மாற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, மியாவாடியில் உள்ள உள்ளூர் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த இலங்கை இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வேலை வாய்ப்புகள்
மியான்மார் தாய்லாந்து எல்லையில் உள்ள ஆயுதம் ஏந்திய குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், 50க்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலை வாய்ப்புகள் என்ற பொய்யான வாக்குறுதியின் கீழ் இவர்கள் ஆரம்பத்தில் மியான்மாருக்கு வரவழைக்கப்பட்டனர்.
எனினும் அவர்கள் கணினி குற்றங்களில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டுள்ளதோடு பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில் மியாவாடி நகரில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு இலங்கை இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும், இன்னும் கிட்டத்தட்ட 50 பேர் இரண்டு தனித்தனி இடங்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையர்கள்
இதில் 20 இலங்கை இளைஞர்கள் தனியாக மியாவாடி நகரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,
மீதமுள்ள 30 பேர் நகரில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் 20 இலங்கையர்கள் திடீரென மியாவாடி நகரின் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், மியாவாடி பொலிஸ் நிலையத்தின் தற்போதைய இருப்பிடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது.
அத்துடன் தாய்லாந்திற்குள் நுழைவதற்கான போக்குவரத்து மையமும் அருகாமையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |