அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ள அறிக்கைகள்!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் படலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கைகள்
நாடாளுமன்றத்தில் நேற்று(08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் மொத்த ஊழியர்ப்படையில் 66.6 சதவீதம் ஆண்களின் பங்களிப்பும், 31.3 சதவீதம் பெண்களின் பங்களிப்பும் காணப்படுகிறது.
இன்றும் பெரும்பாலான பெண்கள் இல்லத்தரசிகளாக வாழும் நிலைமை காணப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்கு அமைய இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல்
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 25 சதவீத பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் வழங்க வேண்டும்.
இதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமைகளை இரத்து செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னனி கோரிக்கை முன்வைத்துள்ளது.
படலந்தா வதை முகாம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் இந்த பணியைச் செய்ய முடியும் என்று அதன் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியிருந்தார்.