இவ்வருடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பற்றி வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் 2022ஆம் ஆண்டில் மாத்திரம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினால் 23.12 பில்லியன் ரூபா சந்தை மதிப்பு கொண்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடற்தொழில் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில், ஏனைய சட்ட நடைமுறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்க உறுதிபூண்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கை
இதேவேளை ஹம்பாந்தோட்டை வெளிச்சவீட்டு பகுதியிலிருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து கடந்த 5ஆம் திகதியன்று கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் 331 கிலோகிராம் ஹெரோயின் பொதிகள் உட்பட, ஏற்றிச் சென்ற உள்ளூர் கடற்தொழில் இழுவை படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஏற்றிச் சென்ற இழுவை படகுடன் சந்தேகநபர்கள் நேற்று (07.11.2022) காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும், இந்த போதைப்பொருள் பொதிகளை பார்வையிடுவதற்காக காலி துறைமுகத்திற்கு சென்றுள்ளனர்.
300 பொதிகள் மீட்பு
கடற்படையின் பிரிவு ஒன்று, வெளிச்சவீட்டு பகுதியிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் தெற்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான உள்ளூர் கடற்தொழில் இழுவை படகை தடுத்து நிறுத்தியது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, படகில் 12 சாக்குகளில் அடைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 331 கிலோ 110 கிராம் எடையுள்ள 300 பொதிகள் மீட்கப்பட்டன. இதன்போது 06 உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கடற்படையினர் கைப்பற்றிய ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த மதிப்பு
13244 மில்லியன் ரூபாய்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




