இந்தியா உடனான உடன்படிக்கைகளில் எமக்கு பாரிய நன்மை : ஆளுநர் நந்தலால் பகிரங்கம்
இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய பொருளாதார சந்தையைக் கொண்டிருக்கும் நாட்டுடன் எட்கா (ETCA) போன்ற ஒப்பந்தத்தை செய்வது இலங்கைக்கு மிகப்பெரிய நன்மையாக அமையும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் நேற்று (18) பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மற்றும் வர்த்தக அமைச்சு
தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவுடனான பொருளாதார, வர்த்தக ரீதியிலான உடன்படிக்கைகள் இலங்கைக்கு பாரிய நன்மை பயக்கும். அதன் தொழில்நுட்ப ஏற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்க வேண்டும்.
இந்தியா மிகப்பெரிய பொருளாதார சந்தையைக் கொண்டிருக்கின்ற நாடு.
இந்தநிலையில் எட்கா உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் மற்றும் வர்த்தக அமைச்சு தீர்மானிக்க வேண்டும்.
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இந்தியாவுடனான பொருளாதார வர்த்தக உடன்படிக்கையானது எமக்கு நன்மை தருவதாக அமையும். வருடம்தோறும் ஏழு மற்றும் எட்டு வீதங்களின் பொருளாதார வளர்ச்சி காணப்படுகின்றது.
ஆசிய பசுபிக் நாடுகள்
எனவே, அது போன்ற ஒரு மிகப்பெரிய சந்தையைக் கொண்ட நாட்டுடன் நாம் வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவது சிறந்ததாக அமையும்.
அதில் எவ்வாறான தொழில்நுட்பங்கள் இடம்பெறும் என்பதை பேசித் தீர்மானிக்கலாம். ஆனால் அந்த நாட்டுடனான வர்த்தக உடன்படிக்கை எமக்கு முக்கியமானது.
இந்நிலையில், இந்தியா மட்டுமல்ல ஆசிய பசுபிக் நாடுகளுடன் நாம் அதிக வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்து கொள்ள வேண்டும்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |