சிறுவர்களிடையே பரவும் நோய் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்னிலங்கை பகுதிகளில் இன்ஃபுளுவென்சா வைரஸ் சிறுவர்களிடையே பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலையடுத்து முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில், இன்ஃபுளுவென்சா வைரஸ் பரவுகின்றமையால் சிறுவர்கள் உள்ள இடங்களில் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்ஃபுளுவென்சாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், குழந்தைகளிடையே விரைவாக பரவுவதாக அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்ஃபுளுவென்சா நோயின் அறிகுறிகள்
இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலிகள், இருமல், சளி ஆகியவை காணப்படும் என்று தெரிவித்த அவர், முன்னர் கொரோனா தொற்றுடைய அறிகுறிகளாக இருக்கின்ற போதிலும், பலர் இன்ஃபுளுவென்சாவால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குழந்தைகளிடையே எளிதில் பரவக்கூடும் என்பதால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கைகளை தவறாமல் கழுவுமாறும், குறிப்பாக வகுப்பறைகள், பாலர் பாடசாலைகள், வைத்திசாலைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது முகக்கவசம் அணியுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவிலான இயற்கை பானங்கள் அருந்துவதுடன், பரிந்துரைக்கப்பட்ட விலைகளை உட்கொள்வதுடன் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.
சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



