அரசாங்கத்தின் திறமையின்மையே டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கு காரணம்: ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் (Photos)
ரூபாவை மிக மோசமான முறையில் இழிவுபெறச் செய்து, டொலரின் பெறுமதி உயர்ந்து சென்றதற்கு நிதி முகாமைத்துவத்தின் அரிச்சுவடி கூடத் தெரியாதவாறு செயலாற்றிய தற்போதைய அரசாங்கத்தின் திறமையே காரணம் என ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் அரசுக்கு எதிராகவும் பெண்கள் மஸ்தியஸ்தனத்தால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பித்த குறித்த பேரணி மணிக்கூட்டுச் சந்தியை அடைந்து அங்கிருந்து மீண்டும் பழைய பேருந்து நிலைய பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாம் ஆடைத் தொழிலில் ஈடுபடுகின்ற பெண் தொழிலாளர்கள் ஆவோம். நாட்டுக்கு வெளிநாட்டுச் செலாவணியைக் கொண்டு வருவதற்கான உழைப்பை நாமே வழங்குகின்றோம். ஆடைத் துறையின் படையணியில் 85வீதமானவர்கள் நாமே.
தனியார் பிரிவையும் ஊழியர் படையணியையும் ஊக்குவிக்கவும் பலப்படுத்துவதற்காக அரசாங்கம் வசதிகளை வழங்கியது முதலாளிமாருக்கு தவிர எமக்கு அல்ல. அதற்காக எமக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் எவை என நாம் அரசிடம் கேள்வியெழுப்புகின்றோம்.
ரூபாவை மிக மோசமான முறையில் இழிவுபெறச் செய்து, டொலரின் பெறுமதி உயர்ந்து சென்றதற்கு நிதி முகாமைத்துவத்தின் அரிச்சுவடி கூடத் தெரியாதவாறு செயலாற்றிய தற்போதைய அரசாங்கத்தின் திறமையே காரணம்.
இன்று விலைவாசி உயர்வையடுத்து நாடுமுழுவதும் மக்கள் போராட்டங்கள் எழுச்சிபெற்று வருகின்றன. காலிமுகத்திடலில் எழுச்சி பெற்று வருகின்றன. அவற்றை அரசு செவிமடுத்ததாகத் தெரியவில்லை.
இவற்றின் அடிப்படை நோக்கமானது 21ஆம் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை இரத்துச் செய்வது மட்டுமல்ல, விலைவாசியைக் கட்டுப்படுத்தி தொடர்ச்சியான ஜனநாயக ஆட்சியொன்றை நிறுவக்கூடிய 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பூரணமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் புதிய பிரதிநிதித்துவமொன்றுடனான நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதுமாகும்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கவனத்தைச் செலுத்துவதற்குப் பாவிக்கப்பட வேண்டும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.
நிகழ்கால ஏகாதிபத்திய ஆட்சியைத் தோற்கடித்து, கட்டமைப்பு ரீதியான
மாற்றங்களுக்கு இடமளித்து அடிமைத் தனமற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக ஆண்
பெண், கட்சி, நிறம், இனம், சாதி, மத பேதங்களின்றி அனைத்து தொழிலாளர்
சக்திகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு ஏகோபித்த குரலெழுப்புவதற்கு உறுதி பூண்டு
அணிதிரள்வோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.







