யாழில் பொதுமக்களை வழிமறித்து பணம் பறிக்கும் மர்ம நபர் - பொலிஸாரின் அசமந்த போக்கால் தொடரும் அட்டூழியம்
யாழ்ப்பாணத்தில் மதுபோதை நிறைந்த நபர் ஒருவர், இளைஞர் ஒருவரை தாக்கி, அவரிடமிருந்து பணத்தை அபகரித்துச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபான சாலை வாசலில் நிறை போதையில் நின்ற நபர் ஒருவர், எதிரே உள்ள வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருவோரிடம் மிரட்டி பணம் பெற்று வந்துள்ளார்.
இதற்கமைய, சம்பவம் தினத்தில், ஏ.ரி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்து வந்த இளைஞர் ஒருவரிடமும் பணம் கேட்ட போது, இளைஞன் பணம் கொடுக்க மறுத்ததையடுத்து, கடுமையாக அவரால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த நபர், இளைஞரை மூர்க்கத்தனமாக தாக்கியதுடன், அவரிடம் இருந்த பணத்தினையும் அபகரித்து சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர்
அருகில் உள்ள கடை பணியாளர்கள் வீதியில் சென்றவர்கள் என பலரும் அதனை வேடிக்கை பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடை பணியாளர்களிடம் வினாவிய வேளை, குறித்த நபர் தினமும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருபவர் என்றும், தாம் அவருடன் முரண்பட்டால், கடையின் மீது தாக்குதலோ, வியாபரத்திற்கு இடையூறோ மேற்கொள்வார் என்றும் தாம் அமைதியுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு பல்வேறு தடவைகள் அறிவித்தும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepan அவரால் எழுதப்பட்டு, 08 November, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan