ரணிலுக்கு எதிரான வழக்கு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு அல்லது அவரை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்றைய தினம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொதுப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கின் மீதான விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, உத்தியோகபூர்வ விஜயம் என்ற பெயரில் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது ரணில் விக்கிரமசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, தனது கட்சிக்காரர் உடல்நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனக் கூறி மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்தார்.
ஒரு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக ரணில் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இதுவேளை, பல்கலைக்கழக ஆவணத்தின் உண்மைத்தன்மை மட்டுமே ஒரு குற்றம் நடக்கவில்லை என்பதைத் தீர்மானிக்காது என்று நீதிவான் இசுரு நெத்திகுமார அவதானிப்பு வெளியிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை விரைவுபடுத்தி இறுதி முடிவை அறிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஜூலை 08-ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.