தெற்கு அவுஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்டு மர்மமான முறையில் புதைக்கப்பட்ட இந்தியப்பெண்
தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்தியப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு மர்மமான வகையில் புதைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் தாதியர் கற்கை நெறியை மேற்கொண்டு வரும் 21 வயதுடைய Jasmeen Kaur, என்ற இந்திய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,சந்தேகநபர் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட பெண் தாதியர் கற்கை நெறியை மேற்கொண்டு வந்துள்ளதுடன், முதியோர் இல்லமொன்றிலும் பணி புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் , மார்ச் 5ம் திகதி பணிமுடிந்து வீடு திரும்பவில்லை என தெற்கு அவுஸ்திரேலிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,
இந்தியப் பின்னணி கொண்ட 20 வயதான Tarikjot Singh என்பவரை விசாரித்த போது, அவர் தெற்கு அவுஸ்திரேலியாவின் Flinders Ranges பகுதிக்கு அருகாமையில் பொலிஸாரை அழைத்துச்சென்று, அங்கு பெண் புதைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், அவரது மரணத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் கூறியிருக்கின்றார்.
இதனைத்தொடர்ந்து, அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதுடன், இந்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காதமை குறித்து இளைஞர் மீது முதலில் குற்றச்சாட்டினை பதிவு செய்த பொலிஸார், தொடர்ச்சியாக விசாரித்த பின்னர், அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டினையும் பதிவு செய்துள்ளனர்.
குறித்த இளைஞர் பணி முடிந்து கார் தரிப்பிடத்திற்கு வந்த போது பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பின் கொலை செய்திருப்பதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன்போது குற்றம்சாட்டப்பட்ட நபரின் விபரங்களை வெளியிட முடியாதவாறு நீதிமன்றம் தடையுத்தரவினை விதித்திருந்த நிலையில்,தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேகநபரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.