‘‘வடக்கு - கிழக்கில் இந்திய, அமெரிக்க இராணுவங்கள் தரை இறங்கலாம்’’
வடக்கு - கிழக்கில் இந்திய, அமெரிக்க இராணுவங்கள் தரை இறங்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (MK Sivajilingam) தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் எதிரும்,புதிருமாக இருந்த அமெரிக்கா மற்றும் இந்தியா தற்பொழுது ஒரே அணியாக வந்துள்ளனர். எனவே,எதிர்காலத்தில் வடக்கு - கிழக்கு பகுதிகளில் இந்திய, அமெரிக்க இராணுவங்கள் தரை இறங்கும் வாய்ப்புக்களும் உருவாகக்கூடிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளருடனான சந்திப்பு தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதாவது பூகோள அரசியல் சார்ந்த விடயங்களில் வேகமாக அதிரடி நடவடிக்கை எடுக்கக்கூடிய கட்டத்தில் அமெரிக்கா,இந்தியா போன்றவர்கள் இருக்கின்றனர்.
ஈழத்தமிழர்களின் பிரச்சினை தற்பொழுது இந்தியாவின் முதன்மை பிரச்சினையாக மாறியுள்ளது.
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உதவி செய்தால் மாத்திரமே ஈழத்தமிழர்களை தமது கைகளுக்குள் வைத்துக்கொள்ள முடியுமென்பதை இந்தியா மிக ஆழமாக எண்ணி வருகின்றது.
இதுவரை, காலமும் இந்தியாவில் இருந்த நிகழ்ச்சி நிரலில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.