இலங்கை – இந்திய கூட்டு இராணுவப் பயிற்சியில் 170 இந்திய வீரர்கள் பங்கேற்பு
இலங்கையின் மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினரின் 12ஆவது கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ரா சக்தி 2026 நடைபெற்று வருகிறது.
நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பமான இந்தப் பயிற்சி நவம்பர் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இதில் இந்தியாவின் 170 பாதுகாப்புப் படையினர் பங்கேற்றுள்ளனர். 14 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நகர்ப்புறப் போர் முறைகள், கூட்டு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கை
மேலும், நகர்ப்புற ரோந்துப் பணிகள், வாகனப் பாதுகாப்பு, வீதித் தடுப்பு நடவடிக்கைகள், பதுங்கித் தாக்குதல் மற்றும் வான்படை ஆதரவுடனான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகளும் இடம்பெறுகின்றன.

இந்தப் பயிற்சியின் இறுதியில் இரு நாட்டு இராணுவத்தினரும் இணைந்து கூட்டு நடவடிக்கைப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மித்ரா சக்தி பயிற்சி, இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் இராணுவ உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது.